Saturday, December 18, 2010

நியூ யார்க்கில் - நான் சந்தித்ததும்! சிந்தித்ததும்!

இலக்கிய வாசனை, நல்ல தமிழ் நடை, நற்சிந்தனை என்று எதையாவது எதிர்பார்த்து இந்த blog ஐ படிக்க வந்தவர்கள் கவனத்திற்கு;  உங்களுக்கான சரக்கு என் கூடையில் இல்லை.. மன்னிக்கவும்!!

சந்தித்தவை:

இந்திய எல்லைகளை முதல் முறையாக தாண்டி, இப்போது நியூ யார்க்கில் நிற்கிறேன். (அரசு முறை பயனமவா போயிருக்க போற? ஏதாவது வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலைக்கு போயிருப்ப! என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது). வானுயர்ந்த கோபுரங்கள், பரபரப்பான சூழல், புன்முறுவலோடு முகங்கள், பாதாள போக்குவரத்து என்று எதுவும் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை (அல்லது) நான் ஆச்சர்ய பட விட்டதில்லை. முதல் முறை பார்த்த ரப்பர் வைத்த பென்சில், டிக் பேனா, கலர் டிவி, ரஜினி படம், ரயில் பயணம் அந்த வரிசையில் நியூ யார்க் அவ்வளவுதான். ஆனாலும், என்னை ஆச்சர்ய படுத்திய ஒன்று உண்டு. சுத்தமான கடை வீதிகள் மற்றும் நடை பாதைகள்  (சாக்லேட் பேப்பர்களை, டீ கப்களை எல்லாம்  எங்கதாண்டா  போடுறிங்க)!!
 
நானும் என் நண்பரும் சும்மா ஊர் சுற்றிக் கொண்டு அப்படியே ஒரு அடுக்கு மாடி shopping mall உள்ளே போய்விட்டோம், வெளியில் வரும்போது தான் தெரிந்தது அது ஒரு மாநகர பேருந்து நிலையமாம்!!. என்னால் நம்ப முடிய வில்லை; பேருந்து நிலையத்துக்கான அடையாளங்களை தொலைத்து விட்டதாகவே தோன்றியது. எந்த தூணிலும் யாரும் வெற்றிலை துப்ப வில்லை, 60 வயதுக்கு மேல் உள்ள பாட்டிகளோ, மூன்று வயதுக்கு குறைவான சிறார்களோ பிச்சை கேட்கவில்லை, குப்பை இல்லை, அலுமினியத் தட்டில் காரச்சேவு இல்லை! பிறகெப்படி பாஸ், அது பேருந்து நிலையம் ஆகும்???

சிந்தித்தவை:

நம்மூர் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நடை பாதைகள், நடை மேம்பாலங்கள் மட்டும் ஏன் இப்படி அசுத்தமாய் இருக்கிறது? நம் மக்களுக்கு நாகரிகம் போதாது என்று சொல்லாதிர்கள். இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து நாகரிகம் வந்தது?? இங்கேயும் குப்பைகள் தெருக்களில் போடப்படுகிறது, ஆனால் மணிக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது.. அதுதான் உண்மை.

நம் அரசு இலவசங்களை நிறுத்தி விட்டு, சுகாதாரம் தரலாம் என்று எனக்கு தோன்றுகிறது. அதிகப்படியான துப்புரவு தொழிலார்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பு வேலைகளையும் தீவிர படுத்தலாம் இல்லையேல் இது சாத்தியம் ஆகாது. இப்போது உங்களுக்கு இரண்டு கேள்விகள் தோன்றலாம்!!

1. சுத்தப்படுத்தினால் மட்டும் இவர்கள் என்ன திருந்தவா போறார்கள்?
    ஒரு முறை, இரு முறை, நூறு முறை துப்புவர்களா? 101 வது முறை திருந்தி தானே ஆகணும். அடிக்க அடிக்க வாங்கியதால் தானே நமக்கு சுதந்திரமே கிடைத்தது! (காந்தியத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை.. வெறும் உதாரணம் தான் ) முயற்சித்து தான் பார்ப்போமே!

2. அவ்வளவு வேலை ஆட்களுக்கு எங்கே போவது? எவ்வளவு ஊதியம் கொடுப்பது?
    அரசு வேலை என்றால் ஆட்களா இல்லை. ஆனால் ஊதிய உயர்வு, வேலை நிறுத்தங்களை சமாளித்துதான் அகனும் :-). என்னிடம் இன்னொரு வழியும் உண்டு. எப்படியும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நடை பாதைகளில் ஒன்றுக்கு குறையாமல் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள், அவர்களை நியமிக்கலாம். அவர்கள் என்ன பிச்சை மட்டும் தான் எடுப்பேன், வேலை செய்ய மாட்டேன் என்று குல தெய்வத்தின் மேல் சத்தியமா செய்திருக்க போகிறார்கள்!!  அல்லது சிக்னலில் கைக்குட்டை விற்கும் பெண்களா இல்லை நம்மிடம், அவர்கள் செய்து விட்டு போகிறார்கள். குறைந்த ஊதியம் போதுமானது.

                   எவ்வளவோ பண்ணிட்டோம்! இதப்பண்ண மட்டோமா?

                                                                          (மீண்டும் தொடர்வோம்....)